தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் இனத்தின் உண்மையான பாதுகாவலர் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சேலத்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருடன் பிரேமலதா விஜயகாந்த் ஒரே மேடையில் பங்கேற்றார். முன்னதாக, தலைவர்கள் அனைவரும் இணைந்து பிரசார மேடைக்கு பேரணியாகச் சென்றனர். அப்போது நடந்த அனுபவங்கள் குறித்து பிரேமலதா பேசியதாவது,

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நான் முதன்முறையாக இன்று பேரணியில் நடந்து சென்றேன். அவர் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குவதற்கு அவரது நடைபயிற்சியும் உடற்பயிற்சியுமே காரணம் என்பதை நேரில் கண்டு வியந்தேன். பேரணியின்போது கூட்ட நெரிசலில் நான் ஒரு பெண் மட்டுமே இருந்தேன். ஆனால், முதலமைச்சர் ஒவ்வொரு நிமிடமும் என்னைத் திரும்பிப் பார்த்து, எனது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டே இருந்தார். அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன், இவர்தான் பெண் இனத்தின் உண்மையான பாதுகாவலர். எனக்கு அவர் அளித்த மரியாதையை, ஒட்டுமொத்தப் பெண் இனத்திற்கும் கிடைத்த மரியாதையாகவே நான் கருதுகிறேன்.

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் பேசியதாவது, தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதை கலாச்சாரம் குறித்த குற்றச்சாட்டுகள் சிலரால் முன்வைக்கப்படுகின்றன. இப்போது நான் முதலமைச்சரின் சகோதரியாக, இந்தக் கூட்டணியில் அவருக்கு வலதுகரமாக இணைந்துள்ளேன். பெண்களுக்கு ஏதேனும் ஒரு குறை என்றால் நான் அவரிடம் உரிமையோடு பேசுவேன். தமிழகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகளை அவர் நிச்சயம் மேம்படுத்துவார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

 

பெண் சக்தியின் வலிமை குறித்துப் பேசிய அவர், தமிழகத்திற்கோ அல்லது திராவிடப் பாரம்பரியத்திற்கோ ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால், தமிழகப் பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஜான்சிராணியாகவும், வேலுநாச்சியாராகவும் மாறி முதலமைச்சருக்கும், இந்த ஆட்சிக்கும் துணை நிற்போம் என்று உறுதிபடத் தெரிவித்தார். பெண் சக்தி ஒன்று திரண்டால், இந்த உலகமே நினைத்தாலும் முதலமைச்சரை எதிர்க்க முடியாது,” என்று பிரேமலதா தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் மேடையிலையே கூறியது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.