மூன்றாவது பிரசவத்திற்காக மகப்பேறு விடுப்பு கோரி மனு அளித்த இளநிலை நீதிமன்ற ஊழியருக்கு விடுப்பு வழங்க மறுப்பது சட்ட விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் ரஞ்சிதா. தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ள இவர், ஓராண்டு மகப்பேறு விடுப்பு மற்றும் இதர உரிய சலுகைகள் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், “மூன்றாவது குழந்தைக்கு அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது” என்ற காரணம் கூறி, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து ரஞ்சிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், இது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பணியில் சேர்ந்தபோது இரு குழந்தைகள் பெற்றிருந்தாலும்கூட, மூன்றாவது கர்ப்பம்  உறுதியான பின்னர் அந்த ஊழியைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், “பெண் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் சுமக்கும் உடல் நெருக்கடிகளும், குழந்தை பிறப்பிற்குப் பின் தாயின் பொறுப்பும் மிக முக்கியமானவை. இதற்கேற்ப மகப்பேறு விடுப்பு வழங்கும் கொள்கை அமலில் உள்ளது. எனவே, மூன்றாவது பிரசவத்திற்கு விடுப்பு வழங்க மறுப்பது முறையற்றது” எனக் கூறி, ரஞ்சிதாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, உரிய அதிகாரிகள் மகப்பேறு விடுப்பை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.