நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதங்களில் மாடுகள் மற்றும் மரங்களை மையமாகக் கொண்ட மாநாடுகளை நடத்தி கவனம் பெற்ற அவர், தற்போது மலைகளுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.
திரைப்பட இயக்குநராக இருந்து, 2010-ம் ஆண்டு அரசியலுக்குள் வந்த சீமான், தொடர்ந்து சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வருகிறார். அவரது மேடைப் பேச்சுகள், குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை வளர்க்கும் விதமாக, கடந்த ஜூலை 10-ஆம் தேதி மதுரையில் மாடுகளுக்கான மாநாடு, அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி திருவள்ளூரில் மரங்களுக்கான மாநாடு நடைபெற்றன. இதில், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்து பகிர்ந்தனர்.
தற்போது, மலைநிலங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன என்ற சுட்டிக்காட்டுகளின் பின்னணியில், மலைகளுக்கான மாநாடு நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஒரு மாவட்டம் மாநாட்டிற்கான இடமாக தேர்வு செய்யப்பட உள்ளதுடன், அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், மலைகளுக்குப் பின்னர் ‘தண்ணீர் மாநாடு’ நடத்தப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளிவந்துள்ளது.
