மத்தியப் பிரதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான உமாங் சிங்கர், “பழங்குடியினர் இந்துக்கள் அல்ல” என கூறியதன் மூலம் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சிந்த்வாராவில் நடைபெற்ற பழங்குடி மேம்பாட்டு கவுன்சில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், “நாங்கள் இந்துக்கள் அல்ல, ஆதிவாசிகள் தான். இதை பெருமையுடன் கூறுகிறேன். சபரி ராமருக்கு உணவு அளித்தவர் – அவளும் ஒரு ஆதிவாசிதான்” என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துகள் பாஜகவின் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளன.

தொடர்ந்து பேசிய உமாங் சிங்கர், “நாம் எந்த மதத்தையும் அவமதிக்கவில்லை. ஆனால் பழங்குடியினரின் கலாசாரம், மரபுகள், அடையாளங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் பழங்குடியினருக்கு மரியாதை கிடைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக, பழங்குடியினரை ‘வனவாசி இந்துக்கள்’ என அழைத்து, அவர்களை இந்து மதத்தில் இணைக்க முயல்கின்றன. இதன் மூலம் அவர்கள் அரசியல் சுயாட்சி, எதிர்ப்பு குரலை அடக்க நினைக்கின்றனர்” எனக் குற்றம் சாட்டினார்.

பழங்குடியினரின் அடையாளம், மரபு, கலாச்சாரத்தை பாதுகாப்பதே தன் முக்கிய நோக்கம் எனவும், பாஜக பழங்குடியினரின் அடையாளத்தை மதிக்கவில்லை  என்றும் உமாங் சிங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். “அவர்களுக்கு பழங்குடியினர் வெறும் வாக்கு வங்கி என்ற  பார்வை மட்டுமே இருக்கிறது” என அவர் தெரிவித்தார். இதற்கிடையே, பாஜக தரப்பில் இருந்து அவரது இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.