கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விஜய் அளித்த சினிமா பாணி விளக்கம் பெரும் விமர்சனங்களை கிளப்பியதுடன், அவரது கட்சித் தொண்டர்களிடையே தீவிர உணர்வுகளை உருவாக்கியுள்ளது. அந்த உணர்வின் ஓட்டத்தில், “விஜய்க்காக என் உயிரையும் கொடுப்பேன்” என கூறும் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் நேரிலும் விஜய் விமர்சிக்கும் நபர்களிடம் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அப்படி, “ரோஸ்ட் பிரதர்ஸ்” என அழைக்கப்படும் யூடியூப் குழுவினரிடம் விஜயைப் பற்றிய விமர்சனங்களால் சண்டைக்குச் சென்ற ஒரு தொண்டர், “ஒரு அப்பா அம்மாவிற்கு பிறந்திருந்தால் என்னை கைது செய்யுங்கள்” என சவால் விடுத்ததோடு, தனது முகவரியையும் பொது வெளியில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரின் செயல்கள் சட்டத்திற்கு எதிராக இருப்பதாக கூறி, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். “நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் தலைவருக்காக!” என பெருமையாக கூறிய அந்த நபருக்கு, தற்போது கட்சியிலிருந்தோ, தலைமையிலிருந்தோ எந்தவொரு ஆதரவும் இல்லை என்பது வேதனையைக் கிளப்பும் ஒரு உண்மை. “தனக்காக போராடிய ஒருவருக்குக் கூட திரும்பிப் பார்க்காத நிலைதான், இந்த அரசியல் கட்சிகளின் உண்மையான முகமா?” என பல  நெட்டிசன்கள் விமர்சனம் பதிவிட, இது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படும் பிரச்சினையாக மாறியுள்ளது.