தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் முன்வைத்துள்ள விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வரும் நிலையில், “ஆட்சியில் பங்கு” வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியின் மாணிக்கம் தாகூர் எம்.பி உள்ளிட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் பிரவீன் சக்ரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்ததுடன், தமிழக அரசின் கடன் சுமையை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டு விமர்சித்தது திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இது குறித்து அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக விஜய் அவர்களைச் சந்திக்கவில்லை. யாராவது தனிப்பட்ட முறையில் சந்திப்பு நடத்தினால் அதற்கு கட்சி பொறுப்பேற்க முடியாது. திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமல்ல, அது ஒரு சித்தாந்த ரீதியிலான கூட்டணி.”

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், “விஜய்யின் கட்சி கொள்கை மற்றும் செயல்பாடுகளில் ஒரு தெளிவற்ற அரசியலையே செய்து வருகிறது. வரும் தேர்தலில் தவெக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது; அவர்கள் மிகக் குறைந்த சதவீத வாக்குகளையே பெறுவார்கள். ஒருவேளை அவர்கள் வாக்குகளைப் பிரித்தாலும், அது திமுக – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியைப் பாதிக்காது,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வரும் வேளையில், அக்கட்சியின் மற்றொரு முக்கிய முகமான சசிகாந்த் செந்தில் நேரடியாக விஜய்யை ‘அட்டாக்’ செய்திருப்பது அக்கட்சியினரிடையே குழப்பத்தையும், அரசியல் அரங்கில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.