தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த வைரவன்பட்டியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார். கூட்டத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்குச் சென்ற அவருக்கு மாவட்ட எல்லையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சனிக்கிழமை இரவு பரமக்குடியில் தங்கிய அவர், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) மாலை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதனிடையே, இன்று காலை பரமக்குடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீரென நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதாவது முதல்வரிடம் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியானது குறித்து உங்கள் கருத்து? என்ன என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அதைப்பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாய்.
ஜனநாயகன்’ படம் முடக்கப்பட்டதற்கு உதயநிதிதான் காரணம் என ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு நான் ஆதவ் அர்ஜுனாவின் செய்திகளைப் படிப்பதில்லை என்றார்.
கஇந்தத் தேர்தல் திமுக-வுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான போட்டியா என்ற கேள்விக்கு கருத்து ஏதுமில்லை (No Comments) என்றார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, தணிக்கை சிக்கல்கள் காரணமாக பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிப்போனது. இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி படத்தின் சில காட்சிகளும், நேற்று முன்தினம் முழுத் திரைப்படமும் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியானது திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
