ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்..

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்ததற்கு ஆழ்ந்த வருத்தம். இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பற்றிய படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார். “இந்த கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன் நிற்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது சார்பாகவும், உக்ரைன் மக்கள் சார்பாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்… உங்கள் இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்கிறோம்” என்று ஜெலென்ஸ்கி ட்வீட் செய்துள்ளார்.

260 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற ஒடிசா ரயில் விபத்து குறித்து சனிக்கிழமை பதிலளித்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, “பலரின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்த செய்தியால் மிகவும் வருத்தமடைந்தேன்” என்று கூறினார். “ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, நான் தெரிவிக்க விரும்புகிறேன்…இறந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கிஷிடா ட்வீட் செய்துள்ளார்.

ஒடிசாவில் மூன்று ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். “பிரான்ஸ் உங்களுடன் [இந்தியா] ஒற்றுமையுடன் நிற்கிறது. என் எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் உள்ளன,” என்று மேக்ரான் கூறினார். தைவான் அதிபர் சாய் இங்-வென்,  மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஒடிசா மாநிலத்தில் ரயில் மோதி விபத்துக்குள்ளானதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் இரங்கல் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் இரங்கலை தெரிவித்துள்ளது.

அதேபோல கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சனிக்கிழமை தனித்தனியாக இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். மேலும் பல உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஒடிசாவில் நேற்று 3 ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 56 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். “இது ஒரு பெரிய விபத்து, ஒவ்வொரு கோணத்திலும் விசாரணைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.