போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது சார்பாகவும், உக்ரைன் மக்கள் சார்பாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்… உங்கள் இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்கிறோம்” என்று ஜெலென்ஸ்கி ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே ஒடிசாவில் நேற்று 3 ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 56 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். “இது ஒரு பெரிய விபத்து, ஒவ்வொரு கோணத்திலும் விசாரணைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.