உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கௌஷிக் விஹார் காலனியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களின் வீட்டிற்குள்ளேயே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் நீர்ப்பாசனத் துறையில் எழுத்தராகப் பணியாற்றி வந்த அசோக் ரதி (42), அவரது மனைவி அஜந்தா (40), தாய் வித்யாவதி (72) மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களான மகன்கள் கார்த்திக் (15), தேவ் (14) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஒரே அறையில் ஐந்து பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையில், ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்திலிருந்து மூன்று கைத்துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அசோக் ரதி குடும்பத்தினர் யாரிடமும் சண்டையிடாத அமைதியானவர்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால், இது குடும்பத் தலைவரே மற்றவர்களைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவமா அல்லது வெளிநபர்கள் யாராவது திட்டமிட்டு நடத்திய படுகொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அசோக் ரதியின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்தும் போலீசார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
