உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த விஷால் என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 28-வது நாளில் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது மனைவி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதைக் கேட்டு விஷால் அதிர்ச்சியில் உறைந்துபோனார். தனக்குத் திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், மனைவி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வி அவரை நிலைகுலையச் செய்தது.

இந்த விவகாரத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஷால், இது குறித்து தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், தற்போது இந்த மோசடி தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்நிலையில் தனது மனைவி மற்றும் அவரது வீட்டார் திட்டமிட்டு உண்மையை மறைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு நீதி வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.