உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டேராடூனில் நடந்த ஒரு சம்பவம், அங்கிருந்த மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளியில், நிரம்பி வழியும் ஓடையில் சுமார் ஆறு பசுக்கள் அடித்துச் செல்லப்படுவது தெளிவாகக் காணப்படுகிறது. வேகமாக ஓடும் நீரில் இருந்து தப்பிக்க அந்தப் பசுக்கள் போராடின. ஆனால் நீரோட்டம் மிகவும் பலமாக இருந்ததால், அருகில் இருந்தவர்கள் உதவி செய்ய முடியாமல், உதவியற்ற நிலையில் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

“>

 

ஆகஸ்ட் 11 திங்கள்கிழமை, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டேராடூனுக்கு மூன்று மணி நேர கடும் மழை எச்சரிக்கை வெளியிட்டது. அந்தக் காலப்பகுதியில் பெய்த கனமழையால் நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கியது. ஆறுகள், ஓடைகள் நிரம்பி வழிந்ததால் வெள்ளப்பெருக்கு உருவானது.

மழை மற்றும் வெள்ளம் காரணமாக மலைப்பகுதிகளில் பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்திய வான் நிலைய மையம் எச்சரிக்கையில், அடுத்த மூன்று நாட்களும் உத்தரகண்ட் முழுவதும் கனமழை பெய்யும் எனவும், அவசர தேவைகள் தவிர பயணங்களைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.