பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘கேட் குமார்’ என்ற பெயரில் குடியிருப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தந்தை பெயர் ‘கேட்டி பாஸ்’, தாய் பெயர் ‘கட்டியா தேவி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், மாவட்ட ஆட்சியர் உதிதா சிங், வருவாய் அதிகாரி கௌஷல் படேலின் புகாரின் பேரில் நஸ்ரிகஞ்ச் காவல் நிலையத்தில் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
புகைப்படம் உண்மை… விவரங்கள் போலி!
வருவாய் அதிகாரி கௌஷல் படேல், தனது சொந்த விண்ணப்பத்தை RTPS கவுண்டரில் சரிபார்க்கச் சென்றபோது, அதே முகவரியிலிருந்து ‘கேட் குமார்’ என்ற பெயரில் தவறான பெற்றோர் விவரங்களுடன் ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.
அந்த விண்ணப்ப எண் 6205631700 கொண்ட விண்ணப்பம் ரோஹ்தாஸ் மாவட்டம் மோகர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள அஹிபரன் கிராமத்தைச் சேர்ந்த சாதி சான்றிதழுக்காக இருந்தது. புகைப்படம் தன்னுடையது தான் ஆனால் பெயரும், தந்தை பெயரும் போலியாக இருந்ததாக புகார்தாரர் கூறியுள்ளார். அரசு சேவைகளை தவறாகப் பயன்படுத்தவும், ஆன்லைன் போட்டித் தேர்வுகளில் நியாயமற்ற ஆதாயம் பெறவும் இதுவே காரணமாக இருக்கலாம் என அவர் சந்தேகித்துள்ளார்.
முந்தைய போலி விண்ணப்ப வழக்குகளுக்கு பிறகு மீண்டும் சர்ச்சை:
சமீபத்தில் பாட்னாவைச் சேர்ந்த ‘நாய் பாபு’ மற்றும் கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த ‘சோனாலிகா டிராக்டர்’ என்ற பெயர்களில் குடியிருப்பு சான்றிதழுக்கான போலி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த வழக்குகள் விசாரணையில் இருக்கும் நிலையில், இப்போது ‘கேட் குமார்’ விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் மோசடி மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
