உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பஜார் பகுதியில், தீப்பற்றி எரிந்த கட்டிடத்தில் இருந்து தனது மூன்று குழந்தைகளைத் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த மே 12 அன்று இரவு, அங்குள்ள ஒரு பாத்திரக் கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் தீ வேகமாகப் பரவியதால், அர்ச்சனா என்ற பெண் தனது குடும்பத்துடன் மேல் தளத்தில் சிக்கிக்கொண்டார்.

தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாகச் செயல்பட்ட அர்ச்சனா, முதலில் தனது ஒரு வயதுக் குழந்தையை ஜன்னல் வழியாகக் கீழே இருந்தவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தார். பின்னர், பக்கத்து வீட்டுக் கூரைக்கு இடையே இரும்பு ஏணி ஒன்றை வைத்து, அதன் வழியாகத் தனது 13 மற்றும் 10 வயதுடைய இரு மகள்களையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்.

சம்பவம் நடந்த சாம்பியன் தெரு மிகவும் குறுகலாக இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே வருவதில் தாமதம் ஏற்பட்டது. குழந்தைகளைக் காப்பாற்றிய சில நிமிடங்களிலேயே அர்ச்சனா தீப்பிழம்புகளாலும் கடுமையான புகையாலும் சூழப்பட்டார்.

மீட்புக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், கடுமையான தீக்காயங்கள் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தின் போது, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் மாடியில் இருந்து குதித்த அர்ச்சனாவின் நாத்தனாருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், அவரது 13 வயது மகளும் லேசான தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன் பிள்ளைகளுக்குப் புதிய வாழ்வைக் கொடுக்கத் தன்னைத்தானே தியாகம் செய்த இந்தத் தாயின் அசாத்திய தைரியமும் பாசமும் தற்போது சமூக வலைதளங்களில் காணொளியாகப் பரவி, ஒட்டுமொத்த மக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.