பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரான் மாவட்டத்தில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனக்குறைவால் வயிற்றில் விட்டுச் செல்லப்பட்ட கத்தரிக்கோலை அகற்றும் சிகிச்சையின் போது இளம்பெண் ஒருவா் உயிரிழந்தார்.

ஜஜ்ராவைச் சேர்ந்த மணிபூஷன் குமாரின் மனைவி உஷா தேவி (25), கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மோதிஹாரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பெண் மருத்துவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

எனினும், அந்த அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் கவனக்குறைவாக உஷாவின் வயிற்றிலேயே கத்தரிக்கோலை வைத்துத் தையல் இட்டதாகக் கூறப்படுகிறது.

அன்றிலிருந்து தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த உஷாவுக்கு, அண்மையில் வலி தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கத்தரிக்கோலை அகற்ற வியாழக்கிழமை மோதிஹாரியில் உள்ள மற்றொரு தனியார் நர்சிங் ஹோமில் உஷா அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உறவினர்கள், மருத்துவர்களின் அலட்சியமே மரணத்திற்குத் தொடக்கப் புள்ளி எனக்கூறி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து நகர காவல் நிலைய பொறுப்பாளர் ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், “உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, ஆனால் பிரேதப் பரிசோதனைக்கு குடும்பத்தினர் ஒத்துழைக்கவில்லை” என்றார்.

இதற்கிடையே, மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் ரவி பூஷண் சின்கா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விண்ணப்பம் கிடைத்தவுடன் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.