நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல கிராமங்களும், சந்தைப் பகுதிகளும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 165 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தின் கொடூரமான தாக்குதலால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆங்காங்கே மிதந்து கொண்டிருக்கும் நெஞ்சை உலுக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

திரிஷூலி ஆற்றங்கரைப் பகுதியிலிருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள பைரேனி என்னும் இடத்தில், நெடுஞ்சாலை முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தங்கள் ஆயுட்காலத்தில் இதுபோன்ற ஒரு பேரிடரை ஒருபோதும் பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கூறுகின்றனர். பெருக்கெடுத்து வந்த வெள்ளம் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களை அடித்துச் சென்றதோடு, கால்நடைகளையும் விட்டுவைக்காமல் அடித்துச் சென்றுள்ளது.

சீனா-நேபாள எல்லையில் உள்ள ரசுவாகதி அருகே ஏற்பட்ட பனிச்சரிவு, லெண்டே ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்ததே இந்த திடீர் வெள்ளப் பெருக்குக்கு முக்கியக் காரணமாகும். திரிசூலி பஜார், தேவி காட் போன்ற பகுதிகள் மற்றும் அப்பகுதியில் இருந்த பள்ளி உள்ளிட்ட கட்டிடங்களும், சுமார் 40 பாலங்களும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுப் போக்குவரத்து தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் மலைப் பகுதிகளை நோக்கி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். திரிசூலி நெடுஞ்சாலை முற்றிலும் மூடப்பட்டுள்ள நிலையில், புல்டோசர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் இயல்பு நிலை திரும்புவதற்குப் பல மாதங்கள் ஆகும் என்று அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இந்தியா உடனடியாக உதவிக்கரங்களை நீட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் பாலன் ஷாவைத் தொடர்புகொண்டு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி, இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புக் உதவிகள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.