மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அரசுத் தேர்வில் நடைபெற்ற மாபெரும் வினாத்தாள் கசிவு மோசடியை, முன்னாள் காதலி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் இ-மெயில் மூலம் அம்பலப்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட மருந்து ஆய்வாளர் (Drug Inspector) பணிக்கான தேர்வில், ராஜேந்திர படேல் என்பவரின் முன்னாள் காதலி தேர்ச்சி பெற்றிருந்தார். காதல் முறிந்த நிலையில், தனது முன்னாள் காதலி தேர்வில் தேர்ச்சி பெற்றதைக் கண்டு ஆத்திரமடைந்த ராஜேந்திர படேல், அந்தத் தேர்வின் வினாத்தாள் முன்னதாகவே கசிந்த உண்மையை மாநிலத் தேர்வாணையத்திற்குத் தனது இ-மெயில் மூலமாக ரகசியமாக அனுப்பி அம்பலப்படுத்தியுள்ளார்.

​இதனைத் தொடர்ந்து தேர்வாணையம் மற்றும் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தேர்வுக்கு முன்பாகவே பெரும்தொகையைக் பணமாகக் கொடுத்து அந்தப் பெண் வினாத்தாளை சட்டவிரோதமாகப் பெற்றுத் தேர்வில் தேர்ச்சி பெற்றது மிகத் தெளிவாக உறுதியானது.

​இந்தச் சட்டவிரோத வினாத்தாள் கசிவுக்குக் காரணமாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள், மோசடியில் ஈடுபட்ட அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் இடைத்தரகர்கள் உட்பட மொத்தம் 6 பேரைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன்னாள் காதலர்கள் இடையேயான மோதலால் அரசுத் தேர்வு மோசடி மற்றும் அரசு அதிகாரிகளின் அக்கிரமம் வெளிச்சத்திற்கு வந்த இந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.