மகாராஷ்டிரா மாநிலத்தின் பாண்டு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர், கீழே இருந்த மரத்தின் கிளைகளில் அதிர்ஷ்டவசமாகச் சிக்கி உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​பாண்டு பகுதியில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து அப்பெண் திடீரெனக் கீழே விழுந்துள்ளார். இருப்பினும், கட்டடத்தின் கீழே இருந்த அடர்ந்த மரத்தின் கிளைகளில் அவர் சிக்கிக் கொண்டதால், கீழே தரையில் விழாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மரக்கிளையில் தொங்கியபடி பயத்தில் அலறிச் சத்தம் போட்ட அந்தப் பெண்ணைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

​சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், ராட்சத ஏணியைப் பயன்படுத்தி மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணைப் பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

​இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், அப்பெண் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட 10-வது மாடியில் இருந்து குதித்தாரா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 10-வது மாடியில் இருந்து விழுந்தும் மரக்கிளையில் சிக்கிப் பெண் உயிர் தப்பிய இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.