கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல மெஜஸ்டிக் (Majestic) ரயில்வே காவல் நிலையத்திற்குள், நள்ளிரவில் புகார் அளிக்க வந்த நபர் ஒருவர் கர்ப்பிணி பெண் காவலரை இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​ஆகஸ்ட் 26-ஆம் தேதி அதிகாலை வேளையில், பெங்களூரு மெஜஸ்டிக் ரயில்வே காவல் நிலையத்தில் அந்தப் பெண் காவலர் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்குப் புகார் அளிக்க வந்த நபர் ஒருவர், திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் பெண் காவலரைத் தாக்கியுள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் அந்தப் பெண் காவலருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

​காவல் நிலையத்திலேயே அரங்கேறிய இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரை ரயில்வே போலிஸார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 109 மற்றும் 132-ன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாக்குதலுக்கான பின்னணி குறித்துப் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

​பாதுகாப்பு அரணாக விளங்கும் காவல் நிலையத்திற்குள்ளேயே அதுவும் கர்ப்பிணிப் பெண் காவலர் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.