வேலைக்காக வாழ்க்கையா? அல்லது வாழ்க்கைக்காக வேலையா? என்கிற விவாதம் சமீபகாலமாக இணையத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது ஒரு இளம் பெண் தனது மேனேஜருக்கு கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது. சிம்ரன் என்கிற அந்த ஊழியர், தனது பயணத்திற்காக பல வாரங்களுக்கு முன்பே மேனேஜரிடம் அனுமதி பெற்றுள்ளார்.
அதற்கான ஒப்புதலும் கிடைத்துவிட்ட நிலையில், ஜாலியாக ஊர் சுற்ற ஏர்போர்ட்டிற்குச் சென்று விமானத்திற்காகக் காத்திருந்துள்ளார். அப்போது திடீரென மெசேஜ் செய்த அவரது மேனேஜர், “அவசரமான வேலை இருக்கிறது, உங்களது லீவ் ரத்து செய்யப்படுகிறது, உடனே வேலைக்குத் திரும்புங்கள்” என அதிரடி உத்தரவு போட்டுள்ளார்.
இதைக் கண்டு சற்றும் பதறாத அந்தப் பெண், “என்னால் வர முடியாது, நான் இப்போது விமான நிலையத்தில் இருக்கிறேன், வேலையை விட எனக்கு என் தனிப்பட்ட வாழ்க்கைதான் முக்கியம்” என முகத்தில் அடித்தாற்போல பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“முறையாக அனுமதி பெற்ற பிறகு கடைசி நேரத்தில் இப்படித் தொந்தரவு செய்வது அநாகரிகம்” என ஒரு தரப்பினர் ஊழியருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், “அலுவலக வேலையின் அவசரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்” என மற்றொரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.
எது எப்படியோ, ‘வேலைக்காக என் சந்தோஷத்தை விட்டுக்கொடுக்க முடியாது’ என்கிற இந்த ஜென்-இசட் (Gen Z) தலைமுறையின் துணிச்சல் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
