ஏரல் வட்டாட்சியர் கைலாஷ் குமாரசாமியை திருச்செந்தூருக்கு பணியிட மாற்றம் செய்தார் தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி. பணியை சரிவர செய்யாத புகாரில் கைலாஷ் குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏரல் வட்டாட்சியர் ஆக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். திருச்செந்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஏரல் வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17 மற்றும் 18ஆம் தேதி பெய்த பெருமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள்  பெருத்த சேதத்தை சந்தித்தது. இதில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தாமிரபரணி ஆற்றின் கோர வெள்ளத்தால் சின்னாபின்னமானது. இந்த ஆக்ரோஷ வெள்ளத்தில் ஏரல் பாலம் உடைந்தது மட்டுமில்லாமல் கரையோரம் உள்ள அந்த பகுதியில் உள்ள பலரது வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி அந்த ஏரல் பஜாரில் உள்ள கடையின் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளத்தால் மொத்தமாக கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மிகுந்த வேதனையில் கடையின் உரிமையாளர்கள் உள்ளனர். அதேபோல அந்த பகுதி மக்களும் தங்களது வீடுகளை இழந்து பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்..