தமிழக அரசியலில் 108 இடங்களை வென்றும் ஆட்சி அமைக்க முடியாமல் தவெக திணறி வரும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று அரங்கேறிய காட்சிகள் தொண்டர்களின் குமுறலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த அவரைச் சூழ்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், “எப்போ தான் நாம ஆட்சி அமைப்போம்?” என ஆவேசமாக முழக்கமிட்டு தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

இதனால் பதற்றமடைந்த ஆனந்த், சைகையாலேயே அவர்களை அமைதிப்படுத்தி காரில் ஏறிச் சென்றார். முன்னதாக, “யாரும் ஓவரா உணர்ச்சிவசப்பட்டு மீடியாக்களிடம் பேசிவிடக் கூடாது, டிவி விவாதங்களில் தலை காட்டவே கூடாது” என வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு ஆனந்த் செம கறாராக வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

113 எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்திருந்தும், அந்த மேஜிக் நம்பரான 118-ஐ தொட முடியாமல் தவெக தவித்து வருவது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.