உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில், டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவிகளைச் சில இளைஞர்கள் பைக்குகளில் சுற்றி வளைத்துத் துன்புறுத்திய வீடியோ இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகலான தெருக்களில் அதிவேகமாகப் பைக்குகளை ஓட்டிச் செல்வதுடன், வழியில் செல்லும் பெண்களைக் கேலி செய்வதும், அவர்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பதுமாக அந்த இளைஞர்களின் செயல் எல்லை மீறிச் சென்றுள்ளது. பாதுகாப்பாகச் செல்ல வேண்டிய பொதுவழிகளில் கூட இத்தகைய அநாகரிகமான செயல்கள் அரங்கேறுவது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.

​சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, அங்குள்ள சட்ட ஒழுங்குச் சீர்கேட்டை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தெருக்களில் பைக் ரேசர்களின் அராஜகத்தால் மாணவிகள் மிரண்டு ஓடும் அந்தக் காட்சிகள், காண்போர் நெஞ்சைப் பதற வைக்கின்றன.