தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் கால் பதித்தபோது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியைக் கண்டு நெகிழ்ந்து போனார்.

தூத்துக்குடி எல்லைக்குள் அவரது வாகனம் நுழைந்த அந்த நொடியில், “தளபதி.. தலைவா..” என விண்ணைப் பிளக்கும் வகையில் எழுந்த முழக்கங்கள் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்தன.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தங்களின் அன்புக்குரிய நாயகனைப் பார்க்கக் கையில் கட்சி கொடிகளுடன் முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை திரண்டு நின்ற காட்சியைப் பார்த்த விஜய், ஒரு நிமிடம் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கினார்.

காரின் மேல்தளத்தில் நின்று மக்களை நோக்கி கைகூப்பித் தொழுத அவர், மக்களின் இந்த அளவற்ற அன்பிற்குத் தான் எப்போதும் கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். தொண்டர்களின் ஆரவாரம் மற்றும் மக்களின் வரவேற்பால் தூத்துக்குடி மாவட்டமே தற்போது திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.