மும்பையைச் சேர்ந்த மென்பொருள் பணியாளர் ஒருவர், நல்ல வருமானம் இருந்தும் தனது வேலையில் திருப்தி இல்லை என்று சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மாதம் 3 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி, அதில் 2.5 லட்சத்தை முதலீடு செய்யும் அளவிற்கு அவர் நிதி நிலையில் வலுவாக இருக்கிறார். சொந்த வீடு, கடன் இல்லாத வாழ்க்கை, குடும்பத்தினரின் ஆதரவு என எல்லாம் இருந்தும், ஒரே நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுவதால் ஏற்படும் தேக்கம் அவருக்கு மன அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

தனது உழைப்பிற்கு ஏற்ற ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என்பதும், வேலையில் உள்ள சவால்கள் குறையவில்லை என்பதும் அவரின் முக்கிய வருத்தமாக உள்ளது. இந்தச் சூழலில், அவர் தனது வேலையை மாற்றலாமா அல்லது இந்த வருமானமே போதுமா என்ற குழப்பத்தில் உள்ளார்.

இவரின் இந்தப் பதிவிற்குப் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், “வேலையை மாற்றுவதே சிறந்த வழி” என்று அறிவுரை கூற, மற்றவர்களோ இது பணப் பிரச்சனை அல்ல, ஒருவிதமான மன ரீதியான தேக்கநிலை என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

நிதி ரீதியாகப் பாதுகாப்பான வாழ்க்கை இருந்தாலும், பணியிடத்தில் கிடைக்கும் அங்கீகாரமும் வளர்ச்சியும் ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.