ராஞ்சியில் போதைப்பொருள் வழக்கில் பிடிபட்ட சுமார் 200 கிலோ கஞ்சாவை காவல் நிலையத்தில் இருந்த எலிகள் தின்றுவிட்டதாகக் காவல்துறை கூறியதைக் கேட்டு நீதிமன்றமே அதிர்ச்சியடைந்தது. 2022-ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த இந்திரஜித் ராய் என்பவர் ஒரு வாகனத்தில் 200 கிலோ கஞ்சாவைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் ஆதாரமாகக் காட்ட முடியாமல் போனதற்கு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பொட்டலங்களை எலிகள் சேதப்படுத்திவிட்டன என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இந்த விசித்திரமான காரணத்தையும், காவல்துறையினரின் விசாரணையில் இருந்த பல குளறுபடிகளையும் கவனித்த ராஞ்சி நீதிமன்றம் கடும் அதிருப்தி அடைந்தது. பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவைப் பாதுகாக்கத் தவறியது மற்றும் சரியான சாட்சிகள் இல்லாதது போன்ற காரணங்களால், குற்றம் சாட்டப்பட்ட வாலிபரை நீதிமன்றம் விடுவித்தது. ஆதாரங்கள் இல்லாத நிலையில் எலிகள் கஞ்சாவைத் தின்றுவிட்டதாகக் கூறி வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.