அரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த 28 வயது பெண், குடும்பத் தகராறு காரணமாகத் தனது தாயுடன் கோபித்துக்கொண்டு இரவு நேரத்தில் தோழி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேனில் வந்த இரண்டு இளைஞர்கள், தங்களை நம்பினால் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர்.
அதை நம்பி வேனில் ஏறிய அந்தப் பெண்ணை, அந்த வாலிபர்கள் ஓடும் வேனில் சுமார் 3 மணி நேரம் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெண்ணின் எதிர்ப்பையும் மீறி அவரைத் தாக்கிய அந்த நபர்கள், பின்னர் குர்கான் – பரிதாபாத் சாலையில் அவரைத் தூக்கி வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் பேரில் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு முகத்திலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
