தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென தோசை சுடுவது நிறுத்தப்பட்ட விவகாரத்தைக் கையில் எடுத்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் அங்கு அதிரடியாக முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளது ஒட்டுமொத்த தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கம்பம் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்குத் தோசை வழங்கப்படுவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. “தோசை இருக்கா இல்லையா?” என்று ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அந்த உணவகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
குறிப்பாக, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ஜெகநாத் மிஸ்ரா இந்த அம்மா உணவகத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து சென்றதில் இருந்தே, இந்தத் தோசை விவகாரம் தொடர்பான பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருவதாகத் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏழை எளிய மக்களின் உணவான தோசைக்கு வந்துள்ள இந்த விசித்திரச் சோதனை மற்றும் தவெகவினரின் இந்த திடீர் போராட்டம் தற்போது சோசியல் மீடியாவில் பொதுமக்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி, வைரலாகி வருகிறது.
