தாயின் அரவணைப்பு மிக அவசியமான ஒன்பது மாதக் குழந்தையை தவிக்க விட்டுவிட்டு, 20 வயது இளம் தாய் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப் பிழியும் சம்பவம் மகாராஷ்டிராவின் குல்தாபாத் தாலுகாவில் நடந்துள்ளது.

அதாவது ஆபேகாவ் பகுதியைச் சேர்ந்த காயத்ரி (20) என்பவருக்கும், பஜி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் வாக்லே என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் உள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, காயத்ரி தனது அறையில் உள்ள இரும்பு கம்பியில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அதிகாலை 9 மணி அளவில், பசியால் வாடிய 9 மாதக் குழந்தை விடாமல் சத்தமாக அழுதுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியுடன் எழுந்த குடும்பத்தினர், காயத்ரியின் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் சடலமாகத் தொங்குவதைக் கண்டு உறைந்து போயினர். தாயின் உடல் மேலே தொங்கிக் கொண்டிருக்க, கீழே அவரது பச்சிளம் குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர் வந்தனா இதுகுறித்து ஆய்வு செய்து, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.

சந்தோஷமாக வாழ்ந்து வந்த காயத்ரி, இவ்வளவு விபரீதமான முடிவை எடுக்கக் காரணம் என்ன? குடும்பத் தகராறா அல்லது மன அழுத்தமா? என்பது குறித்து காவல் ஆய்வாளர் தனஞ்சய் பராடே தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தற்கொலை குறித்து தற்செயலான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாய் என்றால் என்னவென்று கூட தெரியாத வயதில், தன் தாயைப் பறிகொடுத்துவிட்டு அழும் அந்தக் குழந்தையின் நிலை ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.