பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, நடிகர் விஜய் மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தம்பி விஜய் கடந்த சில நாட்களாக கூட்டம் கூடி பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுப்பவர்கள், சரியாக எழுதிக் கொடுக்க வேண்டும். “பிரதமர் மோடி பதவியில் இருந்த காலத்தில், இலங்கை சிறையில் இருந்து 3,700 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். தூக்கு தண்டனையிலிருந்தும் 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இது மிகப்பெரிய சாதனை.”
“நாகையில் ரெயில் தொழிற்சாலை இல்லை என்று விஜய் கூறியிருப்பதை நான் ஆச்சரியத்துடன் கேட்டேன். பெரம்பூர் ரெயில் தொழிற்சாலையில் இன்றுவரை 75,000 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் 65 ‘வந்தே பாரத்’ ரெயில்கள் உள்ளடங்கும். இவரது பேச்சுகள் தரவுகளுக்கு மாறானவை,” என்றார். “விஜயின் பிரசார கூட்டங்களுக்கு மக்கள் அவர் பேசுவதை கேட்கவோ, ஓட்டு போடவோ வரவில்லை. அவரை ஒருமுறை நேரில் காணவே விரும்பி வருகிறார்கள்,” என்றும் அவர் சாடினார்.
மேலும் “தமிழகத்தில் இன்று மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. ஒரு காலத்தில் விஜய் ஷூட்டிங்கில் இருந்தார், இன்று அரசியலுக்கு வந்துவிட்டார். அதே நேரத்தில், மு.க. ஸ்டாலின் அரசியலில் இருந்தவர், இப்போது ஷூட்டிங்கில் இருக்கிறார். விஜய் திமுகவைக் குறிவைத்து பேசுகிறார். ஆனால் பாஜக மீது விமர்சனம் செய்வது பொருத்தமற்றது. ஏனெனில், பாஜக நல்லாட்சியை மேற்கொண்டு வருகிறது,” என தெரிவித்தார்.
