பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அப்போது 65 லட்சம் வாக்காளர்களை அதிரடியாக நீக்கியது. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பெயர் பதிவானவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. ஆனால், இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாகவும், வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் குளறுபடிகள் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் தேர்தல் ஆணையம் இத்தகைய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையில், பீகாரில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவின் தொகுதியைச் சேர்ந்த பலர், தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து அளித்தும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
जीवन में बहुत दिलचस्प अनुभव हुए हैं,
लेकिन कभी ‘मृत लोगों’ के साथ चाय पीने का मौका नहीं मिला था।इस अनोखे अनुभव के लिए, धन्यवाद चुनाव आयोग! pic.twitter.com/Rh9izqIFsD
— Rahul Gandhi (@RahulGandhi) August 13, 2025
“>
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் “இறந்தவர்கள்” எனக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சிலரை நேரில் சந்தித்து பேசியுள்ளார் ராகுல் காந்தி. இதுகுறித்து தனது எக்ஸ் (X) வலைதளத்தில் பதிவிட்ட அவர், “வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் ‘இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை.
இந்த தனித்துவமான அனுபவத்தை தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி!” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதனால் பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம் அரசியல் சூடுபிடித்துள்ளது.
