மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் சிரித்து பேசிய இளைஞரை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜாலஹான் மாவட்டத்தின் ஜாம்நர் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞன் சுலைமான் ரஹீம் கான். இவர் சில தினங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள கஃபே ஒன்றில் வேறு சமூகத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அதனை கவனித்த சிலர் அவர் உணவகத்தை விட்டு வெளியே வந்த போது 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். மேலும் காரை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று காரில் வைத்து சுலைமானை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.
அதனால் மயக்கம் அடைந்த சுலைமானை அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு அந்த கும்பல் அவரது தாய் மற்றும் தங்கையையும் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். உடனே அருகில் உள்ளவர்கள் சுலைமானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், சுலைமான் கட்டைகள் மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதாகவும் அதனால் அவரது உள் உறுப்புகளில் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 12 ஆம் வகுப்பு முடித்த சுலைமான் தான் போலீசாக வேண்டும் என விருப்பப்பட்டுள்ளார், அதற்கான படிப்பை தேர்ந்தெடுப்பதற்காக அவரது தந்தை விண்ணப்ப படிவத்தை வாங்க சென்றுள்ளார். இதனிடையில் சுலைமான் மர்மகும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவான கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
