மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் நீதிபதியின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, நீதிபதி ரமேஷ் கார்க் அவர்களின் இல்லத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று ஜன்னலின் இரும்புக் கிரிலை வெட்டி உள்ளே நுழைந்தது. படுக்கையறையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை வெறும் சில நிமிடங்களில் தட்டிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தின் போது, திருடர்களில் ஒருவன் நகைகளை எடுக்க முயன்றபோது, மற்றொருவர் இரும்புக் கம்பியை நீதிபதியின் மகன் ரித்விக் மீது நீட்டியபடி அச்சுறுத்திக் கொண்டிருந்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

ரித்விக் தூக்கத்தில் இருந்து ஒருவேளை விழித்திருந்தால், அவரை தாக்கத் தயாராக இருந்ததாக காட்சிகள் காட்டபடுகின்றன. இந்த கொள்ளை சம்பவம் நடந்தது வெறும் 4 நிமிடம் 10 வினாடிகளில் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், முகமூடி அணிந்த திருடர்களைக் கண்டறிந்து கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிபதி வீட்டில் நேர்ந்த இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.