புனே இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பாட்டஸ் இரயில் நிலையத்தில், நடை மேம்பாலம் இல்லாத காரணத்தால் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் ஒருவர், எதிர்பாராதவிதமாக நகரத் தொடங்கிய சரக்கு இரயிலுக்கு அடியில் படுத்து உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டஸ் இரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் இல்லாததால், பயணிகள் தண்டவாளத்தைக் கடந்துதான் நடைமேடைக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. சனிக்கிழமை காலை, ஒரு பெண்மணி தனது இரு குழந்தைகளுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது அங்கு நின்றிருந்த சரக்கு இரயில் திடீரென நகரத் தொடங்கியது.
குழந்தைகள் இருவரும் உடனடியாகப் பாய்ந்து நடைமேடைக்குச் சென்ற நிலையில், அந்தப் பெண்ணால் அவ்வளவு விரைவாக நகர முடியவில்லை. இரயில் வேகம் பிடித்ததைக் கண்ட அந்தப் பெண், நொடிப்பொழுதில் எடுத்த முடிவால், இரு தண்டவாளங்களுக்கு இடையே தரையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டார்.
अचानक मालगाडी सुरू; रूळ ओलांडताना महिला घाबरून मध्यभागी झोपली, पाटस रेल्वे स्थानकातील घटना#pune #patas #railway #government #women pic.twitter.com/FYMWsaLBPF
— Lokmat (@lokmat) May 9, 2026
அடுத்த சில நிமிடங்களுக்கு அந்தப் பெண்ணின் உடல் மீது முழு சரக்கு இரயிலும் கடந்து சென்றது. அங்கிருந்த பயணிகள் அனைவரும் பதற்றத்தில் உறைந்து போயினர். இரயில் முழுமையாகக் கடந்த பிறகு, அந்தப் பெண் எவ்விதக் காயமுமின்றி எழுந்து வந்ததைக் கண்ட பின்னரே அனைவரது உயிரும் திரும்பியது. சம்பவம் குறித்து அந்தப் பெண் கூறுகையில், எனது குழந்தைகளை எப்படியோ தள்ளிவிட்டு விட்டேன். என்னால் நகர முடியவில்லை, உயிர் பிழைக்க வேறு வழியின்றி தண்டவாளத்தின் நடுவே படுத்துக் கொண்டேன். இங்கு நடை மேம்பாலம் இல்லாததே இதற்குக் காரணம். தயவுசெய்து எங்களைப் போன்ற பயணிகளின் உயிரோடு விளையாடாமல், உடனே ஒரு மேம்பாலம் கட்டித் தாருங்கள் என உருக்கமாகத் தெரிவித்தார்.
இரயில்வே நிர்வாகத்தின் போதிய வசதிகள் இல்லாததே இது போன்ற விபத்துகளுக்குக் காரணம் எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் திக் திக் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
