திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி பள்ளி முடித்து நண்பகலில் பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அந்தச் சிறுமி வழக்கம்போல் ரயில்வே பாதையை ஒட்டி செல்லும் வழியாக நடந்து சென்றபோது, ஒரு மர்ம நபர் அவரைப் பின்தொடர்ந்து, கத்தியைக் காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வன்கொடுமையின்பின் அந்த சிறுமி தனது உயிரைக் காப்பாற்றி தப்பித்துப் பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து வீட்டிற்கு வந்ததும், அவரின் நிலையைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி நேரில் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தார். சிறுமியின் உடம்பில் பலத்த காயங்களும், ரத்த வடியும் தன்மையும் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குற்றம் நடந்தது ஒரு வாரமாகி விட்டபோதும், குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டிய சிறுமியின் தாய், கண்ணீருடன் தெரிவித்ததாவது: “என் பிள்ளையை ரயில்வே பாதையருகே தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து, முகத்தில் பலமுறை அடித்திருக்கிறான்.

வாயிலெல்லாம் ரத்தம். அதற்கு மேல் ‘நீ கத்தினா தொண்டையை அறுத்து பள்ளத்தில் போட்டுருவேன்’ என மிரட்டியிருக்கான். என் பிள்ளை பயத்தில் எதுவும் பேச முடியாமலேயே வலியால் அழுதுக்கொண்டே இருந்திருக்கிறாள். என் மகள் 4ஆம் வகுப்பு தான் படிக்கிறாள்…

“பாதிக்கப்பட்ட என் மகளின் உடம்பில் இன்னும் அந்தக் காயங்கள் ஆறவில்லை… ஆனால், இன்னும் இந்த கொடூரம் செய்த அந்த இந்திக்கார இளைஞனை கைது செய்யவில்லையே என்பது தான் எனக்கு வேதனையாக இருக்கிறது” என கண்ணீரோடு உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் சம்பந்தமாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குற்றவாளியை கைது செய்யும் வரை சமூக நீதி பெறப்படவில்லை என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.