மதுரை அருகே வரதட்சணை கொடுமை காரணமாக காவலராக பணியாற்றும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவத்தில் காவல் ஆய்வாளராக உள்ள மாமனார் உட்பட நான்கு பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த தங்கப்பிரியா (32) என்ற பெண்ணுக்கு, 2018-ஆம் ஆண்டு மதுரை காதக்கிணறு காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் பூபாலன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
#Madurai | #Police | #Dowry | #Audio pic.twitter.com/JVv7gAmLAu
— PttvOnlinenews (@PttvNewsX) July 18, 2025
தங்கப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் 7 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் உள்ளனர். கடந்த காதணி விழாவில் இருவருக்கும் தலா 5 பவுன் நகை போட வேண்டும் என தங்கப்பிரியாவின் பெற்றோரிடம் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது பூபாலன் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த தங்கப்பிரியா மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பூபாலன் தனது தங்கையிடம் மனைவியை தாக்கியதாக பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.
இந்தத் தாக்குதல் சம்பந்தமாக, பூபாலனின் தந்தை செந்தில்குமரன் (சாத்தூர் காவல் ஆய்வாளர்), தாய் விஜயா, தங்கை அனிதா ஆகியோருக்கும் எதிராக உமச்சிகுளம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பெண் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிற சூழ்நிலையில், காவல்துறையை சேர்ந்த குடும்பத்திலேயே இத்தகைய சம்பவம் நிகழ்வது உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் உள்ளது.
