தென்காசி மாவட்டத்தில் மாமனார் காமராஜ் தனது மருமகளான அருணாவை அருவாளால் வெட்டிய அதிர்ச்சியான சம்பவம் கடையம் அருகே நிகழ்ந்துள்ளது.

மயலாளூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மனைவியான அருணா தனது பிள்ளைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். சக்திவேல் முன்பு நடத்தி வந்த இருசக்கர வாகன உதிரிப்பாகங்கள் கடையை தற்போது அருணா தான் முன்னெடுத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் சக்திவேலின் தந்தை காமராஜ் அருணா வேலை பார்த்து கொண்டிருந்த கடைக்கு வந்து, அவருடன் தகராறு ஏற்படுத்தியுள்ளார். வாக்குவாதம் முற்றிய  நிலையில், தான்  மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, அருணாவை தலையில் மற்றும் கையில் மிகக் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருணா அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் கடை உதவியாளர்களால் மீட்கப்பட்டு, உடனடியாக கடையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது நிலை மிகவும் கவலைக்கிடமானதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் பின் தப்பிச் செல்ல முயன்ற மாமனார் காமராஜை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்த விசாரணையை கடையம் காவல்துறை மேற்கொண்டு வருகிறது. குடும்ப இடையூறுகள் காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பொதுமக்கள் மத்தியில் இது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.