ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்போது சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். இவருக்கும் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தன்னைத் திருமணம் செய்ய அந்த வாலிபர் மறுத்ததாக அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வாலிபரைக் கைது செய்த காவல்துறையினர், பின்னர் அவரை நீதிமன்ற ஜாமீனில் விடுவித்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய காதலனுக்கு, நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதை அறிந்து அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். மேலும், அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதை அறிந்த இளம்பெண், உடனடியாகத் தனது ஆதரவாளர்களுடன் அந்தத் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார்.

தன்னை ஏமாற்றிய காதலனின் திருமணத்தை நிறுத்தக் கோரி அங்கு அவர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் அவரது ஆதரவாளர்களைப் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, இளம்பெண்ணுக்கு ஆதரவாகக் காவல் நிலையம் வந்த கலில் அகமது என்பவரைக் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி கையால் தாக்கி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் திடீரென மயங்கி விழுந்த அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ராயபுரம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. விஜய் தாமு உடனடியாகக் காவல் நிலையத்திற்கு விரைந்தார்.

அங்கு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக நின்ற அவர், “பொதுமக்களை அடிக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?” என்று ஆய்வாளர் சிதம்பர பாரதியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இரு தரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வராமல், பணம் வாங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் ஒருதலைப்பட்சமாக அழைத்து வந்ததாகக் காவல் துறை மீது அவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், அவரை ஏமாற்றிய வாலிபர் மீது ஏன் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by NewsTamil24x7 (@newstamil24x7digital)

இதற்குப் பதிலளித்த காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது வேறொரு காவல் நிலையம் என்றும், இங்கு நடைபெற்ற திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்த முயன்றதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே அவரை அழைத்து வந்து எழுதி வாங்கிவிட்டு அனுப்பியதாகவும் விளக்கம் அளித்தார். எம்.எல்.ஏ. மற்றும் காவல் ஆய்வாளர் இடையே காவல் நிலையத்திற்குள்ளேயே கடுமையான வாக்குவாதம் நீடித்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இரு தரப்பினரிடமும் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது தலையீட்டை அடுத்து காவல் நிலைய நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.