தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 74 வருட திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு புதியதாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்த நிலையில் முதலமைச்சர் விஜய் உட்பட ஒன்பது பேர் ஏற்கனவே பொறுப்பேற்று கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்கும் இடம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் 74 வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைந்தது. முதலமைச்சர் விஜையுடன் சேர்த்து மொத்தம் 33 பேர் மட்டுமே அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கிறார்கள்.

மேலும் இந்த நிலையில் தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 16 பேர் நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் தன்னுடன் ரசிகர் மன்றத்திலிருந்து பணியாற்றியவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை என பல்வேறு சர்ச்சைகள் வெளியான நிலையில் கிட்டத்தட்ட அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 50 சதவீதம் பேர் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் இது தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அமைச்சரவையில் பட்டியல் இனத்தை சேர்ந்த 7 பேர் இடம்பெற்றுள்ள நிலையில் 4 பெண்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.