மகாராஷ்டிர மாநிலம்  லஹுஜி நகரில், தங்களது எதிரியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட காரணத்திற்காக, மோன்யா புலாரி என்ற வாலிபரை அவரது நண்பர்களே நடுரோட்டில் போட்டு கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட பகை மற்றும் பொறாமை காரணமாக அரங்கேறிய இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளது.

பாவ்டியா, பாப்யா மற்றும் அவர்களது கூட்டாளிகள் சிலர், மோன்யா என்ற வாலிபரை வழிமறித்து, “எங்கள் எதிரியின் பிறந்தநாள் விழாவிற்கு நீ எப்படிச் செல்லலாம்?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென அவரை கட்டைகளாலும், கால்களாலும் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

 

இந்தக் கொடூரத் தாக்குதலின் போது, குற்றவாளிகள் மோன்யாவை தரதரவென இழுத்துச் சென்று, அவரது தலையில் அங்கிருந்த இரும்புத் தகரப் பகுதியை கொண்டு பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து போன அந்த வாலிபர், உயிருக்கு பயந்து கதறி அழுதபோதிலும், அக்குரோஷ கும்பல் அவரைத் தொடர்ந்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ளது.

இச்சம்பவம் அங்குள்ள காவல் நிலையத்துக்கு மிக அருகிலேயே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அருகில் இருந்த பெண் ஒருவர் இக்கொடூரத்தை தனது மொபைல் போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, போலீசார் 3 முதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.