மத்தியப் பிரதேச மாநிலம் லஹர் பகுதியில், கணவனின் கறுத்த நிறத்தைக் கேலி செய்தும், ஐபோன், ஏசி போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்கித் தருமாறு வற்புறுத்தியும் மருமகள் கொடுத்த தொடர் மன உளைச்சல் காரணமாக, பாதிக்கப்பட்ட கணவனும் அவரது தாயாரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கமல் கிஷோர் என்பவருக்கும் லதேஷ் மாகூர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான மனைவியின் நடத்தை மாறத் தொடங்கியுள்ளது. கணவனின் தோற்றத்தைக் கேலி செய்து தினமும் சண்டையிட்டு வந்த லதேஷ், மாமியார் வீட்டினரை கடுமையான வார்த்தைகளால் பேசி மனரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, தனக்கு ஐபோன் மற்றும் ஏசி உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை வாங்கித் தர வேண்டும் என்றும், இல்லையெனில் தற்கொலை செய்துகொண்டு ஒட்டுமொத்த குடும்பத்தையும் பொய் வழக்கில் சிறைக்குள் தள்ளிவிடுவேன் என்றும் லதேஷ் மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல்களின் உச்சகட்டமாக, அவர் இருமுறை தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றதாகவும், இதனால் பயந்துபோன குடும்பத்தினர் அண்டை வீட்டாரின் உதவியோடு அவரைப் பலமுறை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.
மருமகளின் பெற்றோர் விவாகரத்து செய்ய வற்புறுத்துமாறு அவளைத் தூண்டிவிடுவதாகவும், விபரீதம் ஏதேனும் நடந்தால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவளது மிரட்டல்களை வீடியோவாகப் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். அந்த வீடியோ ஆதாரங்களை எஸ்பி-யிடம் சமர்ப்பித்ததைக் தொடர்ந்து, போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
