மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் அகோலே தாலுகாவில், அரசு நடத்திய ஆய்வில் சுமார் 55 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ், அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் குறித்து மாதாந்திர கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது, மத்திய அரசின் ‘மாத்ருத்வ வந்தனா யோஜனா’ திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பித்தவர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது, கர்ப்பிணிகளாகப் பதிவு செய்திருந்தவர்களில் 55 பேர் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிகள் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
முதற்கட்ட விசாரணையில், கர்ப்பமாக உள்ளவர்களில் 54 சிறுமிகளுக்குக் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறுமி திருமணமாகாமலேயே கர்ப்பமடைந்துள்ளார். இதில் சில சிறுமிகளுக்கு ஏற்கனவே பிரசவம் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. சமூக அவமதிப்புக்கு பயந்தும், தங்களது பெண் பிள்ளைகள் யாரையேனும் காதலித்து ஓடிவிடுவார்களோ என்ற அச்சத்தினாலும் பல கிராமப்புற பெற்றோர் இத்தகைய சட்டவிரோத குழந்தை திருமணங்களை ரகசியமாக நடத்துவது இந்த ஆய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், மைனர் பெண்களைத் திருமணம் செய்தவர்கள் மீது கடுமையான கிரிமினல் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
