கடந்த 2024-ம் ஆண்டு புனேவில் இரண்டு இளம் மென்பொருள் பொறியாளர்களைப் பலிவாங்கிய  விபத்து வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்த பிரபல பில்டர் விஷால் அகர்வால் தனது குடும்பத்துடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டாடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையுமே மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது.

பாலிவுட்டின் புகழ்பெற்ற “மும்பை சே ஆயா மேரா தோஸ்த்” என்ற பாடலுக்கு விஷால் அகர்வாலும் அவரது மனைவி ஷிவானியும் ஒரு பிரம்மாண்ட பார்ட்டியில் தங்களை மறந்து நடனமாடும் அந்த காட்சிகள், அவர் சிறையிலிருந்து வெளியே வந்ததைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய மெகா பார்ட்டி என நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வைரலானது.

இணையத்தில் மீண்டும் தங்களுக்கு எதிராக வெடித்த இந்த மெகா பஞ்சாயத்தைக் கண்டு அலறியடித்த அகர்வால் குடும்பத்தினர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள், இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். “சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல; இது முற்றிலும் பொய்யான தகவல்.

கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி கோவாவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில், விஷால் அகர்வால் – ஷிவானி தம்பதியின் 25-வது வெள்ளி விழா திருமண ஆண்டைக் கொண்டாடியபோது எடுத்த பழைய குடும்ப வீடியோ இது” என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

2024 மே மாதத்தில் தான்  கார் விபத்தே நடந்தது என்பதால், அதற்குப் பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தங்களது தனிப்பட்ட குடும்ப வீடியோவை, சிலர் திட்டமிட்டு தங்களது குடும்பப் பெயரைத் கெடுப்பதற்காகவும், மன உளைச்சலை ஏற்படுத்துவதற்காகவும் தவறான வதந்திகளுடன் பரப்பி வருவதாக விஷால் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார்.