2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வினோத் காந்திக்கு பதிலாக, மீண்டும் அமைச்சர் ஆர்.காந்தியே போட்டியிடுகிறார்.

ராணிப்பேட்டை தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஆர்.காந்தியின் மகன் வினோத் காந்தி, இத்தொகுதியின் திமுக வேட்பாளராக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று தேர்தல் களம் ஒரு முக்கிய திருப்பத்தைக் கண்டுள்ளது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வினோத் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும், அவரது அரசியல் அனுபவத்தை முன்னிறுத்தியும் தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். வாரிசு அரசியலுக்கு அப்பாற்பட்டு தந்தையின் நீண்டகால மக்கள் பணியைத் தொடர வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, திமுக தலைமை ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் அமைச்சர் ஆர்.காந்தியையே வேட்பாளராக உறுதி செய்துள்ளது. இதையடுத்து, இன்று (ஏப்ரல் 6) அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். மேலும் திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஆர்.காந்தி மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்குவது, அப்பகுதி உடன்பிறப்புகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது