க்ரேட்டர் நொய்டாவின் நாலட்ஜ் பார்க் பகுதியில் உள்ள சார்தா பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில், இரண்டாம் ஆண்டு பீடிஎஸ் (Bachelor of Dental Surgery) படிக்கும் மாணவி ஒருவர் நேற்று  இரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மாணவியின் அறையில் இருந்து தற்கொலைக்குறிப்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அதில், பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒரு ஆண் பேராசிரியர் மற்றும் ஒரு பெண் பேராசிரியர் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

இந்த சம்பவத்தின் பின்னர், பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் உள்ள மாணவிகள் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சம்பவத்தில் பெயரிடப்பட்ட பேராசிரியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

“மாணவியின் குடும்பத்தினருக்கும், சக மாணவர்களுக்கும் விரைவாகவும் வெளிப்படையாகவும் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளோம். தற்போது கல்லூரி வளாகத்தில் நிலைமை மீண்டும் சாதாரணமாகியுள்ளது,” என க்ரேட்டர் நோய்டா ADCP சுதீர் குமார் தெரிவித்தார்.

மாணவியின் குடும்பத்தினர் தகவல் அறிந்து உடனே கல்லூரி விடுதிக்கு வந்துள்ளனர். அவர்களுடன் போலீசார் இணைந்து தேவையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவி தற்கொலை செய்த அறையில் முழுமையான கைரேகை சோதனையை மேற்கொள்வதற்காக தற்சமயம் காவல் துறையின் வழக்கறிஞர்கள் மற்றும் ஃபோரென்ஸிக் அணி தீவிரமாக சோதனை செய்து வருகிறது.