மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ‘எம்.எல்.ஏ கோப்பை’ கிரிக்கெட் போட்டியின் போது, யாரும் எதிர்பாராத ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த தாராகா நகராட்சி மன்ற தலைவர் திடீரென ஒரு டிராக்டரை எடுத்துக்கொண்டு நேரடியாக ஆடுகளத்திற்குள் நுழைந்தார்.

முறையாக அழைப்பு விடுக்காததால் ஆத்திரமடைந்த அவர், டிராக்டர் மூலம் பிட்ச்சை உழுது முற்றிலும் சேதப்படுத்தினார். இதனால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதுடன், அங்கிருந்த வீரர்களும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த அத்துமீறல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மைதானத்தில் இருந்த கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், இதுவரை யாரும் புகார் அளிக்காத காரணத்தால் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஒருவர் டிராக்டரை விட்டு பிட்ச்சை நாசப்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.