சண்டிகரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 20-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், அங்கு பணிபுரியும் ஒரு ஆண் ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் புகாரைப் பதிவு செய்துள்ளனர். அந்த ஆசிரியர் சக ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும், கூச்சலிட்டு மிரட்டுவதாகவும், பணியிடத்தை பாதுகாப்பற்ற இடமாக மாற்றிவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் அவர் பெண் ஊழியர்களிடம் மிகவும் நெருக்கமாக வந்து அச்சுறுத்தும் வகையில் பேசியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பள்ளியின் உள் விசாரணைக் குழு அளித்த அறிக்கை தெளிவற்றதாக இருந்ததால், இந்த வழக்கு தற்போது மாவட்ட அளவிலான குழுவின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் காவல்துறையை அணுகப் போவதாகப் பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இரண்டு தரப்பு நியாயங்களையும் கேட்டறிந்து வரும் அதிகாரிகள், விரைவில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
