நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ மற்றும் அவரது அரசியல் பயணம் குறித்துப் பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்புவிடம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது கடைசித் திரைப்படம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர்: “விஜய்யை நான் ஒரு சக நடிகர் என்று மட்டும் பார்க்கவில்லை. அவர் எனக்கு ஒரு தம்பி போன்றவர்; என்னைப் எப்போதும் ‘அக்கா’ என்றுதான் அழைப்பார். நானும் அவரைத் தம்பி என்றுதான் உரிமையோடு அழைப்பேன்.”
தொடர்ந்து விஜய்யின் சினிமா விலகல் குறித்துப் பேசிய குஷ்பு, “நானும் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை. அவரது நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு நான் அடிமை. அரசியலுக்காக அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பது எனக்குப் பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. ரசிகையாக அவரது முடிவை ஏற்கக் கடினமாக உள்ளது,” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், விஜய்யின் அரசியல் முடிவை வரவேற்ற அவர், “சினிமாவிலிருந்து விலகி ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவரது அரசியல் பயணம் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று கூறினார்.
மேலும் அரசியல் களத்தில் மாற்றுச் சிந்தனைகள் இருந்தாலும், திரையுலக நட்பின் அடிப்படையில் குஷ்பு தெரிவித்த இந்த நெகிழ்ச்சியான கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
