சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உருவாகும் 3.2 கி.மீ உயர்மட்ட மேம்பாலத்திற்காக தமிழக அரசு ரூ.621 கோடி செலவீடு செய்ய திட்டமிட்டிருப்பது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி அதிருப்தி தெரிவித்துள்ளார். கி.மீக்கு ரூ.195 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும், இது வழக்கமான மேம்பால திட்டங்களை விட 50% அதிகமாக இருப்பது ஏற்க முடியாததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆண்டுகளில் கட்டப்பட்ட மேம்பாலங்களை ஒப்பிடும் போது இந்த திட்டத்தின் செலவு பெரிதாக உயர்வது சந்தேகங்களை எழுப்புவதாகவும், லாப நோக்கத்துடன் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். 2022-ல் ரூ.482 கோடியாக இருந்த திட்ட மதிப்பீடு, 2023-ல் ரூ.525 கோடியாக உயர்ந்தது. ஆனால் தற்போது, ஒரே ஆண்டில் மேலும் ரூ.96 கோடி உயர்த்து ரூ.621 கோடியாக மாற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாக விபரீதம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டும் இந்த வகை செலவினங்களைப் பற்றி ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், திட்ட மதிப்பீட்டை 50% அதிகமாக நிர்ணயித்ததற்கான பின்னணி என்ன என்பது குறித்து அரசு உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
