தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுக்குழு மாநாட்டின் போது கூட்டணி குறித்து அறிவிப்பதாக கூறினார். ஆனால் அன்றைய தினம் இன்னும் பல கட்சிகள் கூட்டணி பற்றி அறிவிக்காத நிலையில் நாங்கள் மட்டும் இப்போது அறிவிக்க வேண்டுமா பின்னர் அறிவிக்கிறோம் எனக்கூறி சஸ்பென்ஸ் வைத்துவிட்டார். அவர் அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் எந்த கூட்டணியில் இணைய போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்து வரும் தேர்தலில் ஒரு  சீட்டு ஒதுக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி கொடுத்துள்ள நிலையில் அவர் அதிமுக பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதே நேரத்தில் திமுகவுடன் நெருக்கம் காட்டுவதால் அந்த கூட்டணியிலும் இணைய வாய்ப்பிருப்பதாக ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பிரேமலதா விஜயகாந்தும் தற்போது கூறும் நிலையில்தான் தாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் கூறி வருவதால் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக மாவட்ட செயலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மீண்டும் தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ் பாணியில் கூட்டணி தொடர்பாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார். மேலும் டிடிவி தினகரன், தேமுதிக மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் எந்த கூட்டணியில் இணையப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் டிடிவி தினகரன் அமித்ஷாவை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும் பாஜக அழுத்தத்தின் காரணமாக மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளதாகவும் ஒரு செய்தி இணையதளங்களில் தீயாக பரவிய நிலையில் டிடிவி தினகரன் சற்று முன் கூட்டணி தொடர்பாக எந்தவித குழப்பமும், அழுத்தமோ இல்லை எனவும் உரிய நேரத்தில் அது குறித்து அறிவிப்பு வரும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இதன் காரணமாக இவர்கள் விஜயுடன் இணைவார்கள் அல்லது அதிமுக, திமுக கூட்டணியில் இணைவார்கள் என தமிழக அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்குகிறது.